
'ஸ்மார்ட் கார்டு கிடைக்கவில்லை என்ற கவலை வேண்டாம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பழைய ரேசன் அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அரூர் ஆர்.டி.ஓ.கவிதா தெரிவித்தார்.
ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழா அரூர் அடுத்த எச்.தொட்டம்பட்டியில் நேற்று நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு அரூர் ஆர்.டி.ஓ. கவிதா தலைமை வகித்தார். மேலும், பொதுமக்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார்.
அப்போது, அவர் பேசியது:
“பொதுமக்கள் எப்போதும் தங்களுடன் எளிதாக வைத்திருக்கும் வகையில், ஸ்மார்ட் கார்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. புதிதாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு மூலம், போலி ரேசன் கார்டுகள் ஒழிவதுடன், ஒளிவு மறைவின்றி ரேசன் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்.
முறைகேடுகள் நடப்பது தடுக்கப்படும். பொதுமக்கள் தங்களது மொபைல் போனிலுள்ள செயலி மூலம் www.tnepds.gov.in என்ற இணையதளத்தில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய ரேசன் கார்டுக்கு விண்ணப்பித்தல், ஆதார் எண் இணைத்தல், மொபைல் எண் மாற்றம் செய்தல் உள்ளிட்டவைகளை செய்து கொள்ளலாம்.
மேலும், ரேசன் கடையில் பொருட்கள் குறித்த இருப்பு விவரங்கள் மற்றும் தாங்கள் வாங்கிய பொருட்கள் குறித்த தகவல்கள் பொதுமக்களின் மொபைல் போனிற்கு வரும்.
அரூர் பகுதிக்கு, முதல் கட்டமாக, 8 ஆயிரத்து 330 ஸ்மார்ட் கார்டுகள் வந்துள்ளன. படிப்படியாக மீதமுள்ள கார்டுகள் அனைவருக்கும் வரும்.
ஸ்மார்ட் கார்டு கிடைக்காதவர்கள், அது வரும் வரை பழைய ரேசன் கார்டுகளை பயன்படுத்தி, இரண்டு மாதத்திற்கு ரேசன் கடையில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்” என்றுப் பேசினார்.
இந்த விழாவில், கூட்டுறவு சார்பதிவாளர் (பொது விநியோகம்) சீனிவாசன், தாசில்தார் செல்வராஜ், டி.எஸ்.ஓ.ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.