வெற்றிகரமாக நடந்து முடிந்தது பட்டினப் பிரவேசம்... தருமபுர ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதி உலா!!

By Narendran SFirst Published May 23, 2022, 8:56 AM IST
Highlights

கடும் எதிர்ப்புகளுக்கிடையே தருமபுர ஆதீனம் பட்டின பிரவேச நிகழ்ச்சி வெற்றி கரமாக நடைபெற்றது. தருமபுர ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதி உலா சென்றார். 

கடும் எதிர்ப்புகளுக்கிடையே தருமபுர ஆதீனம் பட்டின பிரவேச நிகழ்ச்சி வெற்றி கரமாக நடைபெற்றது. தருமபுர ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதி உலா சென்றார். மயிலாடுதுறையில் உள்ள பழைமைவாய்ந்த தருமபுர ஆதீனம் உள்ளது.  இங்கு ஆண்டுதோறும் குருபூஜை விழா, பட்டினப்பிரவேசம் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வைகாசி மாத திருவிழா தொடங்கியது. இந்த நிலையில் நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான திருஞானசம்பந்தர் குருபூஜை விழா மற்றும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. குருமகாசன்னிதானம் சிவிகை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் தூக்கி சென்று ஆதின திருடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். இதற்கிடையே மனிதனை மனிதன் பல்லக்கில் தூக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சில அமைப்புகள் வலியுறுத்தின.

இதை அடுத்து கடந்த மாதம் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்தார். இதை அடுத்து இந்து அமைப்புகள் மற்றும்  அரசியல் கட்சியினர் தமிழக அரசுக்கு கோரிக்கை பட்டினப்பிரவேசத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து பட்டினப்பிரவேசத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. அந்த வகையில் நேற்று பட்டினப்பிரவேசம் விழா சிறப்பாக நடைபெற்றது. டிஐஜி தலைமையில் 2 எஸ்.பி.க்கள் உட்பட சுமார் 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தருமபுர ஆதீனம் 26வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திரு ஆபரணங்கள் அணிந்து திருக்கூட்ட அடியவர்கள், புடைசூழ சிவிக்கை பல்லக்கில் எழுந்தருளினர். யானை, குதிரை, ஒட்டகம் உள்ளிட்ட பரிவாரங்களுடன் நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க, கிராமிய நிகழ்ச்சிகளுடன் தருமபுர ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதி உலா சென்றார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனிடையே நேற்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை எதிர்த்து மயிலாடுதுறை நகரில் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

click me!