இவங்களும் கட்டாயம் ஹெல்மெட் போடனும்... இல்லைனா வழக்குப் பதிவு... எச்சரிக்கும் போக்குவரத்து காவல்துறை !!

By Narendran SFirst Published May 23, 2022, 7:28 AM IST
Highlights

இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை இருக்கும் நபரும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்றும் சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை இருக்கும் நபரும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்றும் சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் வாகன ஓட்டிகளில் பலர் மோட்டார் வாகன விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை. உதாரணமாக ஹெல்மெட் அணியாதது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், சீட்பெல்ட் அணியாதது, அதிவேகத்தில் பயணிப்பது போன்ற பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சம்மந்தப்பட்ட வாகன ஓட்டியோடு மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று தீவிர வாகன சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக  சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வாகன விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரின் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். சென்னை பெருநகரில் பகுப்பாய்வு செய்ததில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான கால பகுதியில் இரு சக்கர வாகன விபத்துகளில் 98 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 841 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 714 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 127 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர்.

எனவே, விபத்துகளை கட்டுப்படுத்தவும், குறைக்கவும், வரும் 23 ஆம் தேதி (இன்று) முதல் சென்னை பெருநகர காவல்துறை இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரும் ஹெல்மெட் விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு வாகன தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும், விபத்தில்லா நகரை அடையவும் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி சிறப்பு வாகன தணிக்கையானது நாளை முதல் தொடங்குகிறது. இதற்காக முக்கிய சாலைகளில் ஆங்காங்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடவுள்ளனர். 

click me!