பள்ளி என்ன ஆர்.எஸ்.எஸ் கூடாரமா ? பொங்கியெழுந்த நாம் தமிழர் கட்சி.. திடீர் போராட்டத்தால் ‘சர்ச்சை’

By Raghupati R  |  First Published Jan 1, 2022, 1:01 PM IST

கோவை மாவட்டத்தில் விளாங்குறிச்சி பகுதியில் அமைந்திருக்கும் தர்ம சாஸ்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கோவை மாவட்டத்தில் விளாங்குறிச்சி பகுதியில் அமைந்திருக்கும் தர்ம சாஸ்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நடந்து வருகிறது.  இதனால் நேற்று அந்த பள்ளியின் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்பட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.   

Latest Videos

undefined

அப்போது பள்ளியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் இந்து முன்னணியினரால் தாக்கப்பட்டார்.   இதனால் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் . இதை அடுத்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதாவிடம் பெரியார் திராவிடர் கழகத்தினரும்,  திராவிடர் விடுதலை கழகத்தினர் , மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் ஒன்று சேர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் மதவெறியைத் தூண்டும் பிரிவினையை ஏற்படுத்தும் அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்த ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெறும் தனியார் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.  அப்போது அங்கு பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.    உடனே பள்ளியின் முன்பாக இருந்த கடைகள் பேக்கரிகள் மூடப்பட்டன.  இதனால் விளாங்குறிச்சியில் பதற்றம் ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்யத் திறந்தபோது, பிரச்சனை பெரிதாகிவிடும் என்பதால் அப்பள்ளியின் வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்துத்துவா அமைப்பினரை பள்ளி வளாகத்திற்குள் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினார்கள்.  

ஆனால், அவர்கள் அதை கேட்கவில்லை.   பள்ளி வளாகத்திற்குள் செல்ல முயன்ற சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரனையும் இந்துத்துவ அமைப்பினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அப்போது அவரக்ளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதையடுத்து ஆணையர் ஜெயச்சந்திரன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். 

போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 19 பேரை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர். போலீசாருடன் வாக்குவாதம் நடத்தி தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் போலீஸார்.

click me!