
''தமிழகத்திற்கு, தற்காலிக முதல்வரை நியமிக்க வேண்டும்,'' என, சமூக சமத்துவப் படை கட்சி நிறுவனர் தலைவர் சிவகாமி கூறினார்.
இதுகுறித்து அவர், வேலூரில் செய்தியாளர்களிடம், “தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து, சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மத்திய அரசு, தமிழக முதல்வர் உடல் நலம் குறித்த அறிக்கையை வெளியிட்டு, இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தற்போது, தமிழகத்தில் காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு மற்றும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது போன்ற பிரச்னைகள் உள்ளன.
இதில் ஒரு முடிவு எடுக்க முடியாமல், குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இது போன்ற பிரச்னைகளை கையாளும் வகையில், தற்காலிக முதல்வரை உடனடியாக நியமிக்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை களைந்து, மீண்டும் நிபுணர் குழுவை அமைத்து மறு ஆய்வு செய்து, தாழ்த்தப்பட்ட, மலை வாழ் மக்களுக்கு போதிய இட ஒதுக்கீடு வழங்கி, அதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்த பிறகு, 30 நாட்கள் கால அவகாசம் கொடுத்த பிறகே, தேர்தலை நடத்த வேண்டும்”. இவ்வாறு அவர் கூறினார்.