
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக இன்று காலையில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 3 மாணவிகள் மற்றும் 2 இளைஞர்கள் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், டெங்குவின் பாதிப்பு அதிகரித்தே வருகிறது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரை பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் கரூர் மாவட்டம், மணவாசியைச் சேர்ந்த சிறுமி பூஜா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிறுமி பூஜா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பூஜாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவி மேனகா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார்.
மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு டெங்கு முகாமிற்கு வந்த மாணவி வினித்ரா டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.
இதேபோல் திருவண்ணாமலையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று காலை மட்டும் 3 மாணவிகள், 2 இளைஞர்கள் டெங்குவால் உயிரிழந்த சம்பவம் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.