
கடந்த 9-ம் தேதி வரை டெங்கு காய்ச்சலால் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர். தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும்போதிலும் டெங்குவை கட்டுப்படுத்த முடியவில்லை. டெங்குவைக் கட்டுப்படுத்த அரசு திணறிவருகிறது. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
டெங்குவிற்கு தினமும் சராசரியாக 10 பேர் பலியாகின்றனர். ஆனால் அரசு சார்பில் குறைந்த பேரே உயிரிழந்ததாக கணக்கு காட்டப்படுகிறது.
இந்நிலையில், டெங்குவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், டெங்கு மரணம் குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் கடந்த 9-ம் தேதிவரை டெங்கு காய்ச்சலால் 40 பேர் மட்டுமே உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 11,744 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலேரியா, சிக்குன் குனியா மற்றும் மற்ற காய்ச்சல்களால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறிநாய் கடித்து 13 பேர் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.