ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கக் கோரி முற்றுகைப் போராட்டம்…

First Published Jan 7, 2017, 8:41 AM IST
Highlights


நாகர்கோவில்,

ஓய்வுப் பெற்றத் தொழிலாளர்கள், “டிசம்பர் மாதத்திற்கான ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கக் கோரி, இராணிதோட்டம் பணிமனை அரசுப் போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு டிசம்பர் மாதத்திற்கான ஓய்வூதியம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்தும், ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், மேலும் இதர நிலுவைப் பணப் பலன்களும் விரைந்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுப் பெற்றோர் நல அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் நேற்று இராணித்தோட்டம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு திரண்டனர். இதற்கு மாவட்ட தலைவர் குட்டப்பன் தலைமைத் தாங்கினார்.

அதனைத் தொடர்ந்து திடீரென அவர்கள் பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்கள். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர். இதில் சி.ஐ.டி.யு. நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இதுபற்றித் தகவல் அறிந்த ஆசாரிபள்ளம் காவலாளர்கள் அங்கு விரைந்துச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகும்படி அறிவித்தனர். ஆனால், யாரும் காவலாளர்களை மதிக்காமல், தொடர்ந்து பொதுமேலாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுப் பெற்றோர் நல அமைப்பு நிர்வாகிகளிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்கள் சுமார் 2 ஆயிரத்து 500 பேர். பல கோடி மதிப்பிலான பணப் பலன்கள் வழங்கப்பட வேண்டி இருக்கிறது.

இந்த நிலையில் மாதந்தோறும் 1–ஆம் தேதி வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் இந்த மாதம் இன்னும் வழங்கப்படவில்லை.

இதனைக் கண்டித்துப் பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளோம். டிசம்பர் மாதத்துக்கான ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்” என்றுத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஓய்வுப் பெற்றத் தொழிலாளர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது “வருகிற 11–ஆம் தேதி ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும், பொங்கல் பண்டிகைக்கு முன் நிலுவையில் உள்ள பணப் பலன்கள் வழங்கப்படும்” என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஓய்வுப் பெற்றத் தொழிலாளர்கள் கலைந்துச் சென்றனர்.

பொதுமேலாளர் அலுவலகத்தைத் திடீரென முற்றுகைப் போராட்டம் நடத்திய ஓய்வுப் பெற்றத் தொழிலாளர்களால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

click me!