
கரூர்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளைக் கண்டு கொள்ளாத நடுவணரசைக் கண்டித்தும் கரூரில் விவசாயிகளும், வர்த்தகர்களும் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணையில் விவசாயிகளும், வர்த்தகர்களும் ஒன்றிணைந்து உண்ணாவிரத போராட்டமும், கடையடைப்பும் நடத்தினர்.
“தமிழக விவசாயிகள் அனைத்து வங்கிகளிலும் பெற்றுள்ள விவசாய கடன்கள் எல்லாவற்றையும் தள்ளுபடி செய்ய வேண்டும்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர்.
ஐய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் விதவிதமான போராட்டங்களை நடத்தி தங்களது கோரிக்கைகளை மத்திய அரசின் செவிக்கு கொண்டு செல்ல முயல்கின்றனர். ஆனால், மத்திய அரசு தனது செவியை இறுக்கமாக மூடிக் கிடக்கிறது.
இந்த நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவுத் தெரிவித்தும், விவசாயிகளைக் கண்டுகொள்ளாத நடுவணரசை கண்டித்தும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகளும், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும் போராட்டங்களை நடத்துகின்றனர்.
அதன்படி, வெள்ளியணையில் நேற்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் தலைமை வகித்தார். வர்த்தகர் சங்க செயலாளர் நகுல்சாமி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் வெள்ளியணை, தாளியாப்பட்டி, திருமலைநாதன்பட்டி, ஓந்தாம்பட்டி, ஜெகதாபி, செல்லாண்டிப்பட்டி, திருமுடி கௌண்டனூர், மேட்டுப்பட்டி மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடந்தது.
மேலும், இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வெள்ளியணை வர்த்தகர்கள் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை கடைகளை அடைத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் விவசாயத்திற்காகவும், விவசாயிகளுக்காகவும் போராடி வரும் நிலையில், மத்திய அரசும், மாநில அரசும் தனக்கென இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.