
கன்னியாகுமரி
கன்னியாகுமரி கடற்கரையில் கடை வைத்துள்ளவர்கள், வாடகை செலுத்தாததால் கடைகளில் இருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால், பொருட்களை திரும்ப ஒப்படைக்காவிட்டால் தற்கொலை செய்வோம் என்று எச்சரித்தனர்.
கன்னியாகுமரி கடற்கரைப் பகுதி, பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்திற்குச் சொந்தமானது. இங்கு 39 கடைகள் வாடகை அடிப்படையில் செயல்பட நிர்வாகம் அனுமதித்துள்ளது.
இந்த கடைகளில் மேற்கூரை அமைக்கக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், விதிமுறைகளை மீறி சில கடைகளுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தன. அந்த மேற்கூரைகள் சமீபத்தில் நிர்வாக அலுவலர்களின் நடவடிக்கை காரணமாக அகற்றப்பட்டது.
மேலும், வாடகை செலுத்தாத கடைகளுக்கு உடனே நிலுவையில் உள்ள வாடகையை செலுத்தவும் அறிக்கை அனுப்பப்பட்டது.
குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் பாரதி, பத்மாநபபுரம் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், தலைமை கணக்கர் ஸ்ரீராமச்சந்திரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் நேற்று வாடகை செலுத்தாத கடைகளின் பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கடற்கரை கடைகளில் இருந்த பொருட்களை அள்ளி வாகனங்களில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இதனால், அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், “பொருட்களை திரும்ப ஒப்படைக்காவிட்டால் தற்கொலை செய்வோம்” என எச்சரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் – வியாபாரிகள் இடையே தேவசம் விடுதியில் பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது, வியாபாரிகள் நிலுவையில் உள்ள தங்கள் வாடகையை தவணை முறையில் செலுத்துவதாக கூறினர்.
இதனையடுத்து பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டது.