இவரே வெடிகுண்டு வைப்பாராம்! இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்! நடிக்காதீங்க ஸ்டாலின்! இபிஎஸ்!

Published : Jul 17, 2025, 03:54 PM IST
edappadi palanisamy

சுருக்கம்

 காமராஜர், கருணாநிதியின் கையைப் பிடித்துப் புகழ்ந்ததாகக் கூறப்படுவது பச்சைப் பொய் என்றும், திமுக வரலாற்றைத் திரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பெருந்தலைவர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்? உங்கள் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர், திமுகவின் துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா தானே? என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

கர்மவீரர் காமராஜர் மறையும் தருவாயிலான நிகழ்வுகள் வரலாற்றுக் குறிப்பாக உள்ள போதே, காமராஜர் கருணாநிதியின் கையைப் பிடித்துப் புகழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய பச்சைப்பொய்? திமுக-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? பெருந்தலைவர் காமராஜர் பற்றி ஸ்டாலினும், திமுக-வும் பேசுவதெல்லாம் நகைமுரண்.

பெருந்தலைவர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்? உங்கள் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர், திமுகவின் துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா தானே? அதை வைத்து, சமூக ஊடகங்கள் முழுக்க ஐயா காமராஜர் குறித்த அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பது உங்கள் திமுக கொத்தடிமைகள் தானே?

காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலி சித்திரங்களை எல்லாம் யாரும் மறந்துவிடவில்லை. அப்படி கர்மவீரர் காமராஜர் மீது பன்னெடுங்காலமாக கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மத்தை, இப்படி ஒரு சர்ச்சை உருவாக்கி, அதன் மூலம் காமராஜர் புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலை செய்வது திமுக தானே? இவரே வெடிகுண்டு வைப்பாராம்.. இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்! நடிக்காதீங்க ஸ்டாலின் அவர்களே.

அவதூறான பேச்சை திரித்து பேசும் போதே தெரிகிறது, உங்களுடைய நோக்கம் என்னவென்று. ஒன்றைத் தெளிவாக சொல்கிறேன்- உங்களாலோ, உங்கள் அடிப்பொடிகாளோ, ஒருபோதும் மக்களுக்காக உழைத்த பெருந்தலைவர் காமராஜரின் புகழைத் துளியும் குறைத்துவிட முடியாது. வாழ்க கர்மவீரரின் புகழ் என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் முழுவதும் நாளை (08.01.2026) 8 மணி நேரம் மின்தடை.. வெளியான முக்கிய அறிவிப்பு
Tamil News Live today 07 January 2026: இன்று வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழைக்கு வாய்ப்பு