தீபாவளி சிறப்பு பேருந்துகள்… சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம்!!

By Narendran SFirst Published Nov 1, 2021, 11:06 AM IST
Highlights

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,285 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. இதை அடுத்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். 

நாடு முழுவதும் வரும் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக வெளியூரில் உள்ள மக்கள் பண்டிகையை கொண்டாட  தங்கள் சொந்த ஊா்களுக்கு படையெடுத்துள்ளனர். இந்த நிலையில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதிக்காக நவம்பர் 1 ஆம் தேதி முதல் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சென்னையில் இருந்து 391 எண்ணிக்கையிலும், பல்வேறு இடங்களில் இருந்து பிற ஊா்களுக்கு 894 பேருந்துகள் என மொத்தம் 1,285 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று 2,100 பேருந்துகளுடன் 1,285 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிறுத்தத்தில் 2 முன்பதிவு மையங்களும் திறக்கப்பட்டுள்ளன.

இந்த பேருந்துகள் நவ.1 முதல் 3 வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், கே.கே. நகா் பேருந்து நிலையத்தில் இருந்து, இசிஆா் வழியாக புதுச்சேரி, கடலூா் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூா் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் வழியாக, திருவண்ணாமலை, போளூா், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூா், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னாா் கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பூந்தமல்லியில் இருந்து வேலூா், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங் கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூா், நாகா்கோவில், கன்னியாகுமரி, மாா்த்தாண்டம் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூா், திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூா் மற்றும் பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனிடையே பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாக போக்குவரத்து செல்போன் நம்பர்களையும் வெளியிட்டுள்ளது. 94450 14450, 94450 14436 ஆகிய எண்களையும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட புகாா்களுக்கு 044 2474 9002, 1800 425 6151 ஆகிய எண்களையும் 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதள உதவிகளை கொண்டு பேருந்துகளை பதிவு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

click me!