
நாஞ்சில் சம்பத்தைக் கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி அளிக்காததால் ஜெ. தீபா அணியினர் இரண்டு பேர் சென்னை கமிஷனர் அலுவலக வாயிலில் அமர்ந்து மறியல் செய்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெ. தீபா சமீபத்தில், போயஸ் கார்டன் இல்லத்தை முற்றுகையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது, இதுபற்றி பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத், அகற்றப்பட வேண்டிய மனிதக்கழிவு, ஈனப்பிரிவு என்று மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார்.
இதைக் கண்டித்து ஜெ. தீபா அணியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்ரமணி என்பவர் தனது ஒரே ஒரு ஆதரவாளருடன், கமிஷனர் அலுவலகம் வந்து, நாஞ்சில் சம்பத்தைக் கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டார்.
இதற்கு, நுண்ணறிவு பிரிவு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, வெளியே வந்த வழக்கறிஞர் சுப்ரமணி, தனது ஒரே ஒரு ஆதரவாளருடன், கமிஷனர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இரண்டே இரண்டு பேர் வாசலில் அமர்ந்து மறியல் நடத்தியதை அனைவரும் சிரித்தபடி பார்த்துச் சென்றனர். பின்னர், போலீஸ் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி வாங்க பேசலாம் என்று உள்ளே அழைத்துச் சென்றனர்.