மழை வெள்ள பாதிப்பு நிதி: ஒரு வாரத்தில் டோக்கன் - உதயநிதி சொன்ன தகவல்!

By Manikanda PrabuFirst Published Dec 10, 2023, 12:32 PM IST
Highlights

முதலமைச்சர் மழை வெள்ள பாதிப்பு நிதி 1 வாரத்தில் டோக்கன் கொடுக்கப்பட்டு வழங்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, அதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கவும்முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Latest Videos

சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூ.5 ஆயிரத்தை ரூ.8 ஆயிரமாகவும், மழையால் பாதிக்கப்பட்ட (33% மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500-ல் இருந்து ரூ.17 ஆயிரமாகவும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் (33% மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.22,500 ஆகவும், மழையால் பாதிக்கப்பட்ட (33% மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410-ல் இருந்து ரூ.8,500 ஆகவும் உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000 என்றிருந்ததை ரூ.37,500 ஆகவும், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.3,000 என்றிருந்ததை ரூ.4,000 ஆகவும், சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கான நிவாரண உதவிகளைப் பொறுத்தவரை, முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), ரூ.32,000-ல் இருந்து ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்தில் இருந்து, ரூபாய் 15 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூ.75 ஆயிரத்தில் இருந்து, ரூ.1 லட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.50 லட்சமாகவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

குடும்ப அட்டை இல்லாதவர்களும் சென்னையில் வசித்து பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும், அவருக்கும் நிவாரண தொகை ரூ.6,000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: டிச.,12இல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆர்.கே.சுரேஷ் ஆஜர்!

இந்த நிலையில், முதலமைச்சர் மழை வெள்ள பாதிப்பு நிதி 1 வாரத்தில் டோக்கன் கொடுக்கப்பட்டு நிவாரண தொகை ரூ.6000 வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மவுலிவாக்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் திருப்புகழ் ஐஏஎஸ் அறிவுறுத்தலின் அடிப்படையில் அமைக்கப்பட்டதால் தான், பெருமளவு மழைநீர் தேங்கவில்லை. இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் சீரடைந்துள்ளது. முதலமைச்சர் மழை வெள்ள பாதிப்பு நிதி 1 வாரத்தில் டோக்கன் கொடுக்கப்பட்டு நிவாரண தொகை ரூ.6000 வழங்கப்படும்.”என்றார்.

எதிர்கட்சிகள் வெள்ளை அறிக்கை குறித்து சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள், நாம் நமது வேலையை பார்ப்போம். தற்போது சென்னை உள்ள நிலைமையில், கார் பந்தயம் வேண்டாம் என ஒத்தி வைத்துள்ளோம். கார் பந்தயம் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!