ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: டிச.,12இல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆர்.கே.சுரேஷ் ஆஜர்!

Published : Dec 10, 2023, 11:47 AM ISTUpdated : Dec 10, 2023, 11:51 AM IST
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: டிச.,12இல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆர்.கே.சுரேஷ் ஆஜர்!

சுருக்கம்

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை திரும்பினார்

ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36,000 வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது. இதனை நம்பி அந்த நிறுவனத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்தனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி அந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு வட்டிப் பணத்தை கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக, தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில், இந்த மோசடி தொடர்பாக, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, அந்த நிறுவனத்தில் இயக்குநர்களில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரீஷ், இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், நாகராஜ், அய்யப்பன், ரூசோ உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேஷிற்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. விசாரணையின் அடிப்படையில், உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது. இதற்கு எதிராக ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததற்கிடையே, அவர் துபாய் சென்று தலைமறைவாகி விட்டார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்கான சட்டம்: மத்திய அரசுக்கு திருமா கடிதம்!

இதையடுத்து, ஆர்.கே.சுரேஷிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மேலும், அவரது வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் முடக்கி நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை திரும்பினார். முன்னதாக, அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வந்ததாக தெரிவித்ததால் ஆர்.கே.சுரேஷ் விடுவிக்கப்பட்டார். டிசம்பர் 12ஆம் தேதி (நாளை மறுதினம்) பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!