மிக்ஜாம் புயல்: நாளை பள்ளிகள் திறக்க ஏற்பாடு - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

By Manikanda PrabuFirst Published Dec 10, 2023, 1:07 PM IST
Highlights

மழை நீர் வெளியேற்றப்பட்டு நாளை பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத பெருமழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிக அதிகமான மழைப்பொழிவை சந்தித்தன. இதன் காரணமாக, இந்த 4 மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

Latest Videos

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாலும், சில பள்ளிகளில் வெள்ள நீர் புகுந்ததாலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மழை வெள்ள பாதிப்பு நிதி: ஒரு வாரத்தில் டோக்கன் - உதயநிதி சொன்ன தகவல்!

இந்த நிலையில், மழை நீர் வெளியேற்றப்பட்டு நாளை பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 4,435 பள்ளிகளில் மழை நீர் சூழ்ந்திருந்தது. தற்போது மழை நீர் வெளியேற்றப்பட்டு நாளை பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் 20,000 புத்தகங்கள் சேதுமடைந்துவிட்டதாக தகவல் பெறப்பட்டுள்ளது. 32 பள்ளிகளில் மட்டும் சுவற்றில் தண்ணீர் ஊறுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த பள்ளிகளை நேரில் ஆய்வு செய்து பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்போம்.” என்றார்.

மழையால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் நடத்துவது குறித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

click me!