ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றதையடுத்து அந்த வெற்றி கோப்பையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்து சிஎஸ்கே அணி உரிமையாளர் சீனிவாசன் வாழ்த்து பெற்றார்.
ஐபிஎல் சென்னை அணி வெற்றி
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டி உலக பிரசித்தி பெற்றவை. இந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ்,பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் களம் இறங்கியது. பத்து அணிகளுக்குள் நடைபெற்ற போட்டியில் பிளே ஆப் சுற்றுக்கு 4 அணிகள் முன்னேறியது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன் அணிகள் இறுதி போட்டியில் களம் இறங்கியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி ஓவரில் சிக்ஸ் மற்றும் ஃபோர் ரன்களை அடித்து ரவீந்திர ஜடேஜா சென்னை அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இந்த வெற்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
இந்தியா முழுவதும் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனியின் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இணையாக ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. சென்னை அணி வெற்றி பெற்றதும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரவீந்திர ஜடேஜாவிற்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து சென்னையில் உள்ள பெருமாள் கோயிலில் ஐபிஎல் கோப்பையை கொண்டு சென்ற சென்னை அணி உரிமையாளர் சிறப்பு வழிபாட்டில் செய்யப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலிடம் ஐபிஎல் கோப்பை
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் IPL - 2023 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையொட்டி அக்கோப்பையை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என். சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் ரூபா குருநாத் ஆகியோர் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்நிகழ்வின்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் தலைமை செயல் அலுவலர் காசி விஸ்வநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படியுங்கள்