
விருதுநகர்
விருதுநகரில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது இரண்டு குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை, காவலாளர்கள் சுற்றி வளைத்ததும் தனது கழுத்தை அறுத்து கொண்டு நிகழ்விடத்திலேயே மடிந்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சல்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி (42). விறகு வெட்டும் தொழிலாளியான இவரது மனைவி முனீஸ்வரி (38). இவர்களுக்கு முத்துலட்சுமி (9) என்ற மகளும், முனீஸ்வரன் (4) என்ற மகனும் இருந்தனர்.
அந்தோணி வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளதால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன் தினம் இரவும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், அனைவரும் வீட்டில் படுத்து தூங்கிவிட்டன. இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த அந்தோணி எழுந்து, தனது மகள் மற்றும் மகனை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
துடிக்க துடிக்க கொடூரமாக இருவரையும் கொன்ற நிலையில் முனீஸ்வரி சத்தம் கேட்டு விழித்துள்ளார். தனது இரு குழந்தைகளும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முனீஸ்வரி சத்தம் போட்டுள்ளார்.
உடனே அந்தோணி அவரையும் அரிவாளை எடுத்து வெட்டி உள்ளார். இதில், உயிர் தப்பிக்க வீட்டை விட்டு வெளியெ வந்த முனீஸ்வரியை விடாமல் துரத்தி சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவர் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். மனைவியும் இறந்து விட்டதாக கருதி அந்தோணி அங்கிருந்து ஓடி விட்டார்.
பின்னர், சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்த நிலையில் சற்று நேரத்தில் ஊரே அங்கு திரண்டுவிட்டது. பின்னர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முனீஸ்வரியை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே வெம்பக்கோட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில் காவலாளர்கள் அங்கு விரைந்து வந்தனர். அப்போது சேதுராமலிங்காபுரம் பகுதியில் பட்டாசு ஆலை அருகே முட்புதருக்குள் அந்தோணி பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு சென்று அந்தோனியை சுற்றி வளைத்தனர். ஊர் மக்களும் நாலாபுறமும் சூழ்ந்தனர். இதைக் கண்டதும் அவர் ஆவேசமானார். அருகில் வந்தால் கொன்று விடுவேன் என்று கத்தியைக்காட்டி மிரட்டினார்.
இந்த நிலையில் பின்னர், திடீரென அந்தோணி தான் வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு அங்கேயே இரத்த வெள்ளத்தில் மடிந்தார்.
காவலாளர்கள் அந்தோணியின் உடல் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் உடலையும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் நாராயணன் ஆகியோர் சல்வார்பட்டிக்கு சென்று இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.