
தஞ்சாவூர்
விவசாயிகளுக்கு தரவேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட ம.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட ம.தி.மு.க. செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாநில விவசாய அணிச் செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் உதயகுமார் வரவேற்றார்.
இந்தக் கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் கணேசமூர்த்தி, சட்டத்துறைச் செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
இந்தக் கூட்டத்தில், “பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா மாநாட்டை தஞ்சையில் நடத்த அனுமதி வழங்கிய பொதுச் செயலாளர் வைகோவுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வது.
மாநாட்டில் சிறப்பாக திட்டமிட்டபடி பங்கேற்றுச் செயலாற்றிய மாவட்டச் செயலாளர் தலைமையிலான குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது
தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி குறைந்தபட்சம் ஒரு போக சாகுபடிக்காகவாவது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் ஈழத்தமிழ் மக்களுக்கு விடிவாக தமிழ் ஈழமே தீர்வு என்றும் அதற்காக உலகம் முழுவதும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
தமிழ் ஈழத்திற்காக குரல் கொடுத்துவிட்டு சென்னைக்கு 1-ஆம் தேதி வருகை தரும் வைகோவை விமான நிலையத்தில் வரவேற்க திரளாகச் சென்று கலந்து கொள்வது” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் விடுதலைவேந்தன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் இறுதியில் மாநகரச் செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றித் தெரிவித்தார்.