
திருவள்ளூர்
கனிம வளங்களை திருடும் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்யப்படும் என்றும், குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருவள்ளூர் ஆட்சியர் எ.சுந்தரவல்லி எச்சரித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "திருவள்ளூர் மாவட்டத்தில் ஆற்றுப்படுகைகள், புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலங்களில் உரிய அனுமதியின்றி திருட்டுத்தனமாக கனிமங்களை வாகனங்களில் எடுத்துச் செல்வதாக மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் அவ்வாறு வாகனங்களில் கனிமங்களை எடுத்துச் சென்றால் நடவடிக்கை எடுக்குமாறு புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் ஆகியோர் மே மாதத்தில் மட்டும் செங்குன்றம், சோழவரம், திருப்பாளைவனம், வைரவன்குப்பம், கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, பொன்னேரி, காரனோடை, எருமைவெட்டிப்பாளையம் மற்றும் சில பகுதிகளில் தீவிர ரோந்து சென்றனர்.
அப்போது, திருட்டுத்தனமாக கனிமங்களை ஏற்றிச்சென்ற 27 வாகனங்களைப் பிடித்து நடவடிக்கை மேற்கொள்ள அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
மேலும், ஆற்றுப் படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் உரிய அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்காக, தீவிர ரோந்து சென்று நடவடிக்கை மேற்கொள்ள வருவாய்த் துறை, கனிம வளத் துறை மற்றும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுபோன்ற கனிம வளங்களை திருடும் குற்றச் செயல்களில் ஈடுபடும் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், தொடர்ந்து கண்காணித்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று அதில் தெரிவித்துள்ளார்.