சிறுமியை பாலியல் கொடுமை செய்தவருக்கு 26 ஆண்டுகள் சிறை; 6 வருட வழக்கின் அதிரடி தீர்ப்பு...

First Published May 30, 2018, 7:54 AM IST
Highlights
26 years imprisonment for sexually harassing a girl


திருவள்ளூர்
 
நான்கு வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி திருவள்ளூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

சென்னை பாடி புதுநகர் பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியை அந்த சிறுமியின் தாயார் சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் கடந்த 2012-ஆம் ஆண்டு விட்டிருந்தார்.

இந்த நிலையில் 27-1-2012 அன்று கடைக்கு பென்சில் வாங்குவதற்கு அந்த சிறுமி சென்றுள்ளார். சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மணிகண்டன் (35) முகப்பேர் கிழக்கு நக்கீரன் சாலையில் உள்ள பாழடைந்த குழந்தைகள் மைய கட்டிடத்திற்கு அந்த சிறுமியை ஏமாற்றி ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார்.

குடிபோதையில் அந்த சிறுமியின் உடலில் பல இடங்களில் நகங்களால் கீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இரவு முழுவதும் அந்த சிறுமியை கொடூரமாக சித்ரவதை செய்துள்ளார்.

28-1-2012 அன்று அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் சிறுமியுடன் இருந்த மணிகண்டனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது அவர் மக்கள் மீது கற்களை வீசி அவர்களை விரட்டியுள்ளார்.

பின்னர் அவர்கள் சென்னை முகப்பேர் ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டனை கைது செய்து அந்த சிறுமியை மீட்டனர். 

இது குறித்து அந்த சிறுமியின் தாயார் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த வழக்கு விசாரணை திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

"சட்டத்திற்கு புறம்பாக சிறுமியை கடத்தி அடைத்து வைத்து கொடுங்காயம் ஏற்படுத்தியதற்கு 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சிறுமியை அடித்து மிரட்டி துன்புறுத்தியதற்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை என மணிகண்டனுக்கு மொத்தம் 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது" என்று நீதிபதி அதிரடியாக தீர்ப்பளித்தார்.

click me!