
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடந்த மாட்டுவண்டி பந்தயத்தில் முதலிடம் பெற்றது சிவகங்கை மாடு. அதன் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடுகள் பரிசுகளை பெற்றன.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் புகழ்பெற்ற சேத்துமேல் செல்வ ஐயனார் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சந்தனக்காப்பு திருவிழா நடைபெறுவதையொட்டி நேற்று மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
இந்தப் பந்தயம் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு என மூன்று பிரிவாக நடைப்பெற்றது. இதில் பெரிய மாடுபிரிவில் 14 இணை மாடுகள் பங்கேற்றன.
இதில் முதல் பரிசு சிவகங்கை மாவட்டம், வேலங்குடி சோலையன் மாடும், இரண்டாவது பரிசை புதுக்கோட்டை பாலகுடிபட்டி கோபிநாத் மாடும், மூன்றாவது பரிசை கே.புதுப்பட்டி கே.ஏ.அம்பாள் மாடும், நான்காவது பரிசை அரிமளம் சேத்துமேல் செல்வஐயனார் மாடும் பெற்றன.
நடுமாடு பிரிவில் 19 இணை மாடுகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசை புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடி பொன்னழகி அம்மன் மாடும், இரண்டாவது பரிசை நல்லிப்பட்டி நாச்சியார் மாடும், மூன்றாவது பரிசை அரிமளம் சின்னராசு மாடும், நான்காவது பரிசை மதுரை மேலூர் சாலினி மாடும் பெற்றன.
கரிச்சான் மாடு பிரிவில் 26 இணை மாடுகள் பங்கேற்றன. தொடர்ந்து பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
அரிமளம் - ராயவரம் சாலையில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தை இருபுறமும் ஆயிரக்கணக்காண பொதுமக்கள் நின்று பார்த்து ரசித்தனர். அரிமளம் ஊரார்கள், ஊர் அம்பலக்காரர்கள், கிராம மக்கள், இளைஞர்கள், மாட்டு வண்டி ரசிகர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.