வெளுத்து வாங்குது கனமழை ! கோவை, நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை !!

By Selvanayagam PFirst Published Aug 8, 2019, 8:37 PM IST
Highlights

தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று உத்தரவிட்டுள்ளார். இதே போல் நீலகிரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் கோவை மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.   மழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன.  தொடர் மழையின் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக  கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.  வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  

இதே போல் நீலகிரி மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவமழை 6-வது நாளாக இன்றும் தீவிரமாக பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ராட்சத மரங்கள் சாலைகளில் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்மழையால் ஊட்டி- மஞ்சூர் சாலையில், குந்தா பாலத்தில் இன்று காலை கற்பூர மரம் விழுந்தது. அப்பர் பவானி, அவலாஞ்சி, கிண்ணக்கொரை, தங்காடு, இத்தலார், பைக்காரா உள்ளிட்ட சாலைகளிலும் மரங்கள் விழுந்துள்ளன.

ஊட்டி - கூடலூர் சாலையில், பைக்காரா அருகே, சாலையில் விரிசல் ஏற்பட்டு, மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறையினர், தீயணைப்பு வீரர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். 

கூடலூர் புத்தூர்வயல் அருகே, தேன்வயல் ஆதிவாசி கிராமம் அமைந்துள்ளது. இங்கு தற்போது, சுமார் 17 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வெள்ளம் புகுந்தது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!