
தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குடும்பத்தினருக்கு போலீஸ் தொந்தரவு அளிக்கக் கூடாது என்றும், சட்டவிரோதமாக கைது நடவடிக்கை கூடாது
என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்புவதாக கூறிய நிலையிலும், பொதுமக்களுக்கு போலீசார் தொல்லை கொடுப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி
வருகின்னறர். மேலும், போலீசார் சட்டவிரோதமாக கைது செய்வதாகவும் குற்றம் சாட்டினர்.
ஒருவரை போலீசார் கைது செய்ய வேண்டும் அவர் மீது வழக்கு பதிந்து, சம்மன் அனுப்பப்பட்ட பின்னரே கைது செய்யப்பட வேண்டும். இது நடைமுறையில்
உள்ளது. ஆனால் போலீசார் சட்டவிரோதமாக பொதுமக்களை கைது செய்வதாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மக்கள் அமைப்பைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்களின் குடும்பத்தினருக்கு போலீசார் தொந்தரவு அளிப்பதாகவும், சட்டவிரோதமாக போலீசார் கைது
நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அதில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது, சட்டவிரோதமாக போலீசார் யாரையும் கைது செய்யக்
கூடாது என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினரை தேவையில்லாமல் துன்புறுத்த கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து ஆளும் தரப்பு வழக்கறிஞர், உரிய முறைப்படிதான் விசாரணை நடத்தி வருவதாக கூறினார். இது குறித்த விரிவான உத்தரவை பின்னர்
அளிப்பதாகவும் இந்த வழக்கை ஒத்திவைப்பதாகவும் உயர்நீதிமன்ற தெரிவித்தது.