
ரஜினி காந்த் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை, நேரில் சென்று சந்தித்த போது அங்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் “ நீங்க யார்?” என ரஜினியிடம் கேட்டார்.
இந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர் “ நாங்க இத்தனை நாள் போராடிய போது சென்னை ரொம்ப தூரத்துல இருந்துதா?” எனவும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதனால் அவர் இணையதளத்தில் மிகவும் பிரபலமடைந்திருக்கிறார். சந்தோஷ் எனப்படும் அந்த இளைஞர் தற்போது பேசிய ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் அவர் ரஜினியை தான் அவ்வாறு கேட்க காரணம் என்ன? என கூறியிருக்கிறார்.
நாங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது பல அரசியல்வாதிகளும் பிரபலங்களும் எங்களை வந்து சந்தித்தனர். ஆனால் யாரிடமும் நான் அப்படி பேசவில்லை. ரஜினி அவர்களிடம் உரிமையில் தான் இந்த கேள்வியை கேட்டேன். நாங்கள் 100 நாட்களாக போராடிய போதே, நீங்கள் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்ற எண்ணத்தில் தான் அப்படி கேட்டேன். ஆனால் ஊடகங்கள் நான் பேசியதை திரித்து கூறிவிட்டன. என்னை அது தனிப்பட்ட முறையில் இப்போது பாதித்திருக்கிறது. என அவர் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.