புகாருக்கு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்; ஆத்திரமடைந்த பெண்கள் சாலை மறியல்...

First Published Jun 1, 2018, 11:17 AM IST
Highlights
Authorities who do not take action for complaints Furious women road block


இராமநாதபுரம் 

இராமநாதபுரத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததற்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்டது சேதுநகர் பகுதி. இங்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் லாரி மற்றும் டிராக்டர்களில் கொண்டுவந்து விற்கப்படும் தண்ணீரை ரூ.10 முதல் ரூ.12 வரை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர். 

குடிநீர் விநியோகம் செய்யக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் நேற்று காலை வெற்றுக் குடங்களுடன் இராமநாதபுரம் - தூத்துக்குடி சாலையில் திடீரென்று உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதுபற்றி தகவலறிந்த இராமநாதபுரம் நகர் காவல் உதவி ஆய்வாளர் சிவசாமி தலைமையிலான காவலாளர்கள் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், குடிநீர் வழங்காதவரை மறியலை கைவிடமாட்டோம் என்று உறுதியாக இருந்தனர். 

இதனையடுத்து அங்கு வந்த இராமநாதபுரம் வட்டாரவளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், "வாணி பகுதியில் குடிநீர் வினியோகம் மின்மோட்டார் பழுது காரணமாக தடைபட்டதாகவும், தற்போது பழுது சரிசெய்யப்பட்டு தண்ணீர் விநியோகம் தொடங்கி உள்ளதாகவும், ஓரிருநாளில் முழுமையாக அனைத்து மோட்டார்களும் இயங்கியதும் சீரான குடிநீர் வழங்கப்படும்" என்று உறுதி அளித்தனர். 

இதனை ஏற்று மறியலில் ஈடுபட்ட பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.

click me!