
தமிழகத்தில் ஆண்டு தோறும் பெய்து வந்த பருவ மழை, தற்போது பழி வாங்கி வருகிறது. இதனால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
முக்கிய ஆறுகள், ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது அதற்கான அடையாளங்கள் தெரியாமல் போய்விட்டன. அதே நேரத்தில் மணல் கொள்ளை மாபியாக்களின் கைவரிசையால் பாலாறு, தென்பெண்ணை, வைகை, தாமிரபரணி ஆகியவை பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.
ஒரு சில நேரங்களில் பெய்யும் லேசான மழைக்கு ஆங்காங்கே குட்டைபோல் தண்ணீர் தேங்கியுள்ளது. நிலத்தடி நீரும் அதலபாதாளாத்துக்கு சென்றதால், விவசாயிகள் தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் சீரழிந்து கொண்டிருக்கிறது. இதை தாங்க முடியாத விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் செயல்படும் வெளிநாட்டு குளிர்பான நிறுவனத்துக்கு, தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான விளக்கம் அளிக்கும்படி, குளிர்பான ஆலைக்கு உத்தரவிட்டது. மேலும், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க இடைகால தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது குளிர்பான ஆலை நிர்வாகம் தரப்பில், தாமிரபரணி ஆற்றில் இருந்து உபரியாக செல்லும் நீரையே பயன்படுத்துவதாக விளக்கம் அளித்தது.
ஆலை நிர்வாகத்தின் அறிக்கையை ஏற்று கொண்ட நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கினர். மேலும், குளிர்பான ஆலைக்கு ஆற்றில் தண்ணீர் எடுக்கலாம் என அனுமதி அளித்தனர்.