இதெல்லாம் உங்களுக்கு அவமானமாக இல்லையா? மக்களுக்கு சேவை வழங்குவதில் அரசு நிர்வாகம் படுதோல்வி! ராமதாஸ்!

By vinoth kumar  |  First Published May 19, 2024, 1:32 PM IST

பொது சேவை மையம் வாயிலாக விண்ணப்பித்தாலும் கூட அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கையூட்டு தர வேண்டியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். கையூட்டு கொடுத்தால் தான் சேவை கிடைக்கும் என்பது அரசுக்கு அவமானம்.


அரசு அலுவலகங்களில் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் குறித்த நேரத்தில் கையூட்டு இல்லாமல் வழங்கப்படுகிறது என்று தமிழக அரசால் கூற முடியாது என ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் மக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசின் சேவைகளைப் பெற  மிக அதிக அளவில் கையூட்டு வழங்க வேண்டியிருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வாக்களித்த மக்களுக்கு பொதுச்சேவை வழங்கும் அடிப்படைக் கடமையை நிறைவேற்றுவதில் கூட தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பதைத் தான் பொதுமக்களின் குற்றச்சாட்டு உறுதி செய்திருக்கிறது.

Tap to resize

Latest Videos

தமிழக மக்களுக்குத் தேவையான சாதிச் சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று,  வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல், திருமணப் பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள், மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் ஆகிய சேவைகளை வழங்க வேண்டியது வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட தமிழக அரசுத் துறைகளின் பணி ஆகும். ஆனால், தவிர்க்கக் கூடாத இந்த சேவைகளைக் கூட தமிழக அரசின் துறைகள் சரியான நேரத்தில் வழங்குவதில்லை என குற்றச்சாட்டுகள்  எழுந்துள்ளன.

இதையும் படிங்க: Online Gambling: ஆன்லைன் சூதாட்ட அரக்கனின் பிடியில் தமிழக மக்கள்! காப்பாற்ற சொல்லி கதறும் அன்புமணி ராமதாஸ்!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அத்தியாவசியச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அடிப்படைச் சேவைகளை பெறுவதற்கு குறைந்தது ரூ.500 முதல் ரூ.10,000 வரை கையூட்டாக வழங்க வேண்டியிருப்பதாகவும், கையூட்டு கொடுத்தாலும் கூட குறித்த காலத்தில் சான்றிதழ்கள் கிடைப்பதில்லை என்றும் பொதுமக்கள் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளனர். பொதுமக்களுக்குத் தேவையான பல சான்றிதழ்களை  பொது சேவை மையம் மூலமாகவே விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்; அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லத் தேவையில்லை என்று அரசு விதிகள் கூறுகின்றன. ஆனால், பொது சேவை மையம் வாயிலாக விண்ணப்பித்தாலும் கூட அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கையூட்டு தர வேண்டியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். கையூட்டு கொடுத்தால் தான் சேவை கிடைக்கும் என்பது அரசுக்கு அவமானம்.

அரசு அலுவலகங்களில் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் குறித்த நேரத்தில் கையூட்டு இல்லாமல் வழங்கப்படுகிறது என்று தமிழக அரசால் கூற முடியாது. கடந்த சில மாதங்களுக்கு முன் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின்படி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர்,‘‘பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், அரசு நலத்திட்டங்களின் பயனடைதல் ஆகியவை எளிமையாக நடைபெற வேண்டும். மக்கள் இதற்காக சில இடங்களில் அலைய வைக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியாளர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும்’’ என்று ஆணையிட்டிருந்தார். ஆனால், அதன் பின் பல மாதங்களாகியும் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. முதலமைச்சரின் ஆணைக்கு மதிப்பு இல்லை; ஊழலற்ற, செயல்தன்மையுடன் கூட நிர்வாகத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்குவதில்  தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது என்பதையே அரசு அலுவலகங்களில் நிலவும் ஊழல் காட்டுகிறது.

 சாதிச்சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ் போன்றவை மக்களுக்கும், மாணவர்களுக்கும் அடிப்படை தேவைகள். அவை அனைத்தும் ஒரு சில நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டியவை. ஆனால், அவற்றைப் பெறுவதற்கு மக்கள் பெருமளவில் கையூட்டு தர வேண்டியிருப்பதும், அப்படி கொடுத்தாலும் கூட அந்த சான்றிதழ்கள் கிடைக்காமல் இருப்பதும் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகங்கள் ஆகும்.  இந்த துரோகங்களுக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். அது தமிழக அரசின் கடமை ஆகும்.

பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் குறித்த நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றால், அதற்கான ஒரே தீர்வு பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றுவது மட்டும் தான். தமிழகத்தில் பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால், சாதிச்சான்றிதழ், பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். குறித்த காலத்தில் அரசின் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும் சட்டத்தில் வகை செய்யப்படும். அதனால், அரசு அதிகாரிகள் குறித்த நேரத்தில் சேவை வழங்குவார்கள்.

இதையும் படிங்க:  சாலையில் கழன்று ஓடிய சக்கரம்! இதுதான் அரசு பேருந்துகள் பழுது பார்த்த லட்சணமா? ஆளுங்கட்சியை அலறவிடும் அன்புமணி!

பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அந்த 20 மாநிலங்களையும் விட தமிழகத்தில் தான் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது. ஆனால், தமிழக அரசு தான் இச்சட்டத்தை நிறைவேற்ற மறுக்கிறது. இன்னும் கேட்டால் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்பின் சட்டப்பேரவையில் ஆளுனர் ஆற்றிய உரையின் போதும், விரைவில்  சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. மக்களுக்கு அனைத்து சேவைகளும் குறித்த காலத்தில் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்காக அடுத்த மாத இறுதியில் கூட இருக்கும் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

click me!