கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு; தீவு போல காட்சியளிக்கும் தண்ணீரில் மூழ்கிய கடலூர் கிராமங்கள்...

By Suresh Arulmozhivarman  |  First Published Aug 17, 2018, 9:30 AM IST

காவிரி ஆற்றில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 


காவிரி ஆற்றில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால், கடலூரில் உள்ள  கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி தீவு போல காட்சியளிக்கின்றன. 

Latest Videos

undefined

கருநாடகத்தில் தென்மேற்குப் பருவமழைத் தொடங்கி கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணை 2-வது முறையாக மீண்டும் நிரம்பியுள்ளது. கேட்டாலும் தண்ணீர் தராத கருநாடக அரசு, தற்போது தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டது.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்துவிட்டதால் அதிலிருந்து விநாடிக்கு ஒரு இலட்சத்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றுத் தண்ணீர் தஞ்சை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கீழணையை வந்து அடைந்தது. இங்கிருந்து வெளியேறும் உபரிநீர் சிதம்பரம் வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றின் வழியாக கொடியம்பாளையத்தில் வங்கக்  கடலில் கலக்கிறது.

அதன்படி, நேற்று மூன்றாவது நாளாக சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடியது. காவிரி நீர் பழைய கொள்ளிடம் ஆற்றில் உட்புகுந்ததால் பெராம்பட்டு, திட்டுக்காட்டூர் இடையே உள்ள தரைப்பாலத்தை வெள்ளம் மூடியது. இதனால் இங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேலும், கீழகுண்டலபாடி, திட்டுக்காட்டூர், மடத்தான்தோப்பு, பெராம்பட்டு, செயங்கொண்டப்பட்டினம், நடுத்திட்டு, வேளக்குடி ஆகிய ஏழு கிராமங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. இதில், திட்டுக்காட்டூர், கீழகுண்டலப்பாடி, செயங்கொண்டப்பட்டினம் ஆகிய கிராமங்கள் தீவுகளைப் போல காட்சியளிக்கின்றன. இதனால் இங்கு போக்குவரத்து படகு மூலம் தான் நடக்கிறது.

மேலும், கொள்ளிடக் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எந்தளவில் இருக்கிறது என்று நேற்று கடலூர் ஆட்சியர் தண்டபாணி பார்வையிட வந்திருந்தார். 

அவர், மழை வெள்ளத்தால் சூழப்பட்டிருந்த பெராம்பட்டு கிராமத்திற்குச் சென்றார். அவருடன் காவல் கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, பாண்டியன் எம்.எல்.ஏ, சிதம்பரம் கோட்டாட்சியர் இராஜேந்திரன், தாசில்தார் அமுதா மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். 

கொள்ளிடம் ஆற்றில் மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சுற்றியுள்ள மூன்று கிராம மக்களையும் அருகில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்குமாறு உத்தரவிட்டார். கொள்ளிடம் ஆற்றில் ஒன்றரை இலட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளது. அவ்வாறு தண்ணீர் அதிகரிக்கும்போது சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!