நீலகிரியில் மூன்று நாட்களாக தொடர் கனமழை; போன வருடம் நீரின்றி தவித்த மக்களுக்கு இந்த வருடம் அடித்தது ஜாக்பாட்...

First Published Aug 10, 2018, 9:45 AM IST
Highlights

நீலகிரியில் உள்ள மஞ்சூர், கூடலூர், பந்தூர் போன்ற பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. போன வருடம் நீரின்றி தவித்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த வருடம் பெய்துள்ள கனமழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போனவருடம் மழை பொய்த்துப் போனதால் தேயிலைத் தோட்டங்கள் வறண்டன. அதுமட்டுமின்றி, இத்தலார்,  பிக்கட்டி, பாலாகொலா, கீழ்குந்தா, முள்ளிகூர், மேல்குந்தா போன்ற கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

ஆனால், இந்தாண்டு வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்து வருகிறது. அதன்படி, கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அதேபோன்று, நீலகிரியின் கூடலூர், பந்தூர் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று இங்குள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது. நேற்றைய நிலவரப்படி கூடலூரில் 60 மிமீ மழை பெய்துள்ளது. 

கேரளாவின் வயநாடு, மலப்புரம் போன்ற மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் இப்பகுதிகளில் வெள்ளப்பெருகு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக எல்லையோரப் பகுதிகளான நீலகீரியின் கூடலூரும், கேரள எல்லைப் பகுதிகளும் மலைப் பிரதேசம் என்பதால் இங்கு அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.

அதன்படி, கேரள எல்லைப் பகுதிகளிலும் தமிழக எல்லைப் பகுதிகளின் பல இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள் சரிந்து  கிடக்கின்றன. பாறைகள் விழுந்து கிடக்கின்றன. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மரங்கள் மற்றும் பாறைகள் அகற்றும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளன.

click me!