திருவாரூர் அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு

Published : Jul 14, 2025, 03:19 PM IST
School Water Tank (AI Image)

சுருக்கம்

திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது. சமையலறை பொருட்கள் சேதப்படுத்தப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சமையலறை பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு, மாணவ-மாணவிகள் குடிநீர் அருந்தும் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

நடந்தது என்ன?

காரியாங்குடி, நெம்மேலி, இலங்கைச்சேரி பகுதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயிலும் காரியாங்குடி அரசு தொடக்கப்பள்ளியில், காலை உணவுத் திட்டத்தின் கீழ் சமையல் பணிகள் நடைபெறுவது வழக்கம். இன்று காலை உணவு சமைக்க வந்த சமையல் ஊழியர்கள், சமையலறையில் இருந்த பொருட்கள் உடைக்கப்பட்டு நொறுக்கப்பட்டிருந்ததையும், மளிகைப் பொருட்கள் சிதறிக் கிடந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பள்ளி வளாகத்தைச் சுற்றிப் பார்த்தபோது, மாணவர்கள் குடிநீர் அருந்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி உடைக்கப்பட்டு, அதற்குள் மனிதக்கழிவு கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், பள்ளி வளாகத்தில் இருந்த வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. தென்னை மரங்களில் இருந்த தேங்காய்களும் பறிக்கப்பட்டிருந்தன. இச்செயலில் ஈடுபட்டவர்கள் பள்ளி வளாகத்தில் சிக்கன் சமைத்து சாப்பிட்டுவிட்டு, மீதமுள்ள பொருட்களை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.

போலீஸ் விசாரணையின் மூவர் கைது:

இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன், திருவாரூர் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார், மனிதக் கழிவு கலந்த குடிநீர் தொட்டி மற்றும் சேதப்படுத்தப்பட்ட சமையல் பொருட்களையும் பார்வையிட்டு, ஊழியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) அன்புச்செல்வி மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.

குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் அறிந்த கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டு, இச்சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது குறித்து திருவாரூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இந்தப் பள்ளியில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் படித்து வருவதால், இதில் சாதியப் பிரச்சினை ஏதுமில்லை என்றும், குடிபோதையில் இருந்தவர்கள் தான் இந்த செயலைச் செய்துள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் கண்டனம்:

இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் கூறுகையில், "பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் உரிய விசாரணை நடத்தப்படும். தவறு யார் செய்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருவாரூர் அருகே காரியாங்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!