நின்று கொண்டிருந்த மினி லாரியை இடித்த தள்ளிய கன்டெய்னர் லாரி; ஒருவர் பலி; ஆந்திர மாநில ஓட்டுநர் கைது...

First Published Jun 14, 2018, 6:30 AM IST
Highlights
Container Larry demolished mini lorry One died Andhra Pradesh driver arrested


 
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் பழுதாகி சாலையோரத்தில் நின்ற மினிலாரியை, கன்டெய்னர் லாரி இடித்து தள்ளியதில் ஒருவர் பலியானார். ஆந்திர மாநில லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம், செல்லூரில் இருந்து சேலத்துக்கு கடலை மிட்டாய் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று சென்றது. மினி லாரியை செல்லூரைச் சேர்ந்த செல்வக்குமார் (30) என்பவர் ஓட்டினார். அவருக்கு உதவியாளராக விக்னேஷ் (28) என்பவர் உடன் வந்தார். 

திண்டுக்கல் - கரூர் 4 வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி பகுதியில் லாரி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது மினிலாரி திடீரென பழுதானது. இதனையடுத்து ஓட்டுநர் செல்வக்குமார் மற்றும் உதவியாளர் விக்னேஷ் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு உப்பு ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி, பழுதாகி நின்ற மினிலாரி மீது வேகமாக மோதியது. இதில், மினிலாரியை சில அடிதூரம் கன்டெய்னர் லாரி தள்ளிக்கொண்டுச் சென்றது. 

இந்த விபத்தில் மினிலாரி பலத்த சேதமடைந்தது. மேலும் லாரியில் இருந்த கடலை மிட்டாய் பெட்டிகளும் சின்னாபின்னாமாக சிதறின. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்ட மினிலாரி ஓட்டுநர் செல்வக்குமார் நிகழ்விடத்திலேயே பலியானார். மேலும், உதவியாளர் விக்னேஷ் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கூம்பூர் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த விக்னேசை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், பலியான செல்வக்குமாரின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து கன்டெய்னர் லாரி ஓட்டுநர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாகேஷ் (25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

click me!