2024 மக்களவை பொதுத்தேர்தலைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைமை கட்சியில் முக்கிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழகத்திலும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு புதியவர் நியமனம் செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய மாநிலத் தலைவராக இருக்கும் கே.எஸ். அழகிரி நான்கு ஆண்டுகளாக பதவியில் நீடிப்பதால் அவருக்குப் பதிலாக புதியவரை நியமனம் செய்ய காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது என கட்சிக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வைத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாநிலங்களவை எம்பி ஷக்திசின் கோஹில், ஹரியானா, டெல்லி காங்கிரஸ் தலைவராக தீபக் பபாரியாவும் மும்பை காங்கிரஸ் தலைவராக வர்ஷா கெய்க்வாட்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி தலைவரே... பிரதமரிடம் கேள்வி கேட்ட கார்கேவுக்கு பாஜக கொடுத்த பதிலடி!
ஜோதிமணி
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் சிலர் தலைவர் பதவியை எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, இந்தப் போட்டியில் கரூர் தொகுதியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ரேசில் முந்துபவராக இருக்கிறார். ஒவ்வொரு முறையும் ராகுல் காந்தியின் தமிழகப் பயணங்களின்போது ஜோதிமணி முன்வரிசையில் தோன்றினார். குறிப்பாக, பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் நடைபயணம் சென்ற ஜோதிமணி மொழிபெயர்ப்பாளராகவும் செயல்பட்டார். கூட்டணிக் கட்சியான திமுகவுடன் இணைந்து மிகவும் ஆக்டிவாக செயல்பட்டுவரும் பெண் தலைவராகவும் இருக்கும் அவருக்கு கட்சியிலும் கணிசமான செல்வாக்கு உள்ளது.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. இவர் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் இந்திய ஆட்சிப் பணியில் இருந்து விலகினார். பாஜக ஆட்சியில் நாட்டின் அடிப்படை அமைப்புகள் சிதைக்கப்படுகின்றன என்று குற்றம் சாட்டி அவர் ராஜினாமா செய்திருந்தார்.
சசிகாந்த் செந்தில்
அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் இயங்கிவரும் சசிகாந்த் செந்தில், கடந்த மே மாதம் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராகச் நியமிக்கப்பட்டார். தேர்தலில் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க இவரது தேர்தல் வியூக செயல்பாடுகளும் முக்கியமானது என்று பாராட்டப்பட்டது.
மேலும் தமிழ்நாட்டில் பாஜகவின் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை இருப்பதால், அவரை எதிர்கொள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் சரியானவராக இருப்பார் என்று காங்கிரஸ் தலைமை கருதவதாகத் தெரிகிறது.
வெள்ளை மாளிகையில் இருந்த ரகசிய ஆவணங்களை தூக்கிச் சென்ற ட்ரம்ப்! குற்றப்பத்திரிகையில் தகவல்
கார்த்தி சிதம்பரம்
இவர்கள் தவிர கிருஷ்ணகிரி எம்.பி. செல்லக்குமார், முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்திக் சிதம்பரம், காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை ஆகியோரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு முயற்சி செய்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
குறிப்பாக கார்த்தி சிதம்பரம் சில சந்தர்ப்பங்களில் தனது ஆசையை வெளிப்படையாகவே கூறி இருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை பொதுத்தேர்தலைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைமை கட்சியில் முக்கிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனால், கூடிய விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கும் புதிய தலைமை நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கலாம்.
செருப்பு பிஞ்சிடும்... நடுரோட்டில் சில்மிஷம் செய்தவரை செருப்பைக் கழற்றி அடித்த மாணவி