
கன்னியாகுமரியில் இருந்து சிகிச்சைக்காக ஆம்புலன்சில் சென்னை அழைத்துவரப்பட்ட 80 வயது மூதாட்டி, அந்த ஆம்புலன்ஸ் சரக்கு லாரி மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் பலியானார்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த மேரி என்ற 80 வயது மூதாட்டி, மேல் சிகிச்சைக்காக தனது மகளுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
அந்த ஆம்புலன்ஸ் மதுரவாயில் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, சாலையின் இடது புறமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சிகிச்சை பெற வந்த மூதாட்டியும், தலையில் படுகாயம் அடைந்த ஆம்புலன்ஸ் டிரைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேரியின் மகளும், ஆம்புலன்ஸ் உதவியாளரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவ இடத்துக்கு வந்த ரோந்து போலீசார் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர்.
மேரி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து கோயம்பேடு காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பஞ்சாப்பைச் சேர்ந்த சரக்கு லாரி ஓட்டுநர் யுதீஸ்தர் சிங்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தென் கோடியில் இருந்து சிகிச்சை பெற ஆம்புலன்சில் வந்த அந்த பெண் ஒருவரின் உயிரை அந்த ஆம்புலன்சே பறித்துவிட்டது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…