
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளி பெண் ஒருவரிடம் செபோன் திருடிய வாலிபரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
குற்றவாளிகளுக்கு பணம் சம்பாதிக்க தற்போதைய எளிய வழி செல்போன் பறிப்பு. சென்னையில் சமீப காலமாக செல்போன் பறிப்பு அதிகரித்து வருகிறது. இளம் சிறார்கள், அதிகளவில் செல்போன் பறிக்கும் குற்ற செயல்களில் ஈடுபடுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
சாதாரண பொதுமக்களிடம் குறைந்தது, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் புழக்கத்தில் உள்ளது. இத குறி வைக்கும், இதுபோன்ற சமூக விரோதிகள் முகவரி கேட்பதுபோல் அல்லது அவர்கள் அசந்து இருக்கும் நேரத்தில் செல்போனை பறித்து செல்கின்றனர்.
ஒரு நபர், ஒரு நாளைக்கு குறைந்தது 5 பேரிடம், செல்போன்களை பிறிப்பதாகவும், அவ்வாறு பறிக்கப்படும் செல்போன்களை அதற்கென்று இருக்கும் வியாபாரிகளிடம் ரூ.2. ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரையில் விற்று பணம் சம்பாதிக்கின்றனர்.
இதன் மூலம் ஒரு நாளைக்கு சாதாரணமாக ரூ.10 ஆயிரம் வரை எளிதில் சம்பாதிப்பதால், பலரும் இந்த திருட்டு தொழிலில் ஈடுபடுகின்றனர். மறுபுறம் இதுபோன்ற செல்போன்களை பறிகொடுப்பவர்களின் 60 சதவீதத்திற்கும் மேலானவர்கள், போலீசில் புகார் அளிப்பதில்லை. இதுகுற்றவாளிகளுக்கு சாதகமாக அமைகிறது.
அங்கு, இங்கு என்று நடந்த சம்பவங்கள், தற்போது, நோய்க்காக சிகிச்சை பெறப்படும் மருத்துவமனைகளிலும் பரவ ஆரம்பித்துவிட்டது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மாதவரத்தை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரிடம் நேற்று, ஒரு வாலிபர் நைசாக செல்போனை திருடுவதை பார்த்த, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சூரியபிரதாபன் என்பவர், மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தார்.
போலீசாரின் விசாரணையில், செல்போன் திருடி சிக்கியவர் செல்வகுமார் என தெரியவந்தது. இதே செல்வகுமார், சூரிய பிரதாபனிடம் கடந்த 4 நாட்களுக்கு முன், அவரது செல்போனையும் திருடினார். தனது செல்போனை திருடியது யார் என சூரியபிரதாபன் 4 நாட்களாக அலைந்து திரிந்ததில், செல்வகுமார் சிக்கி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.