
நீலகிரி
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.300-க்கு குறைவாக புதிய சம்பளம் ஒப்பந்தம் போட்டால் எஸ்டேட் நிர்வாகத்தினர்களைக் கண்டித்து உண்ணாவிரதம் போராட்டங்கள் நடத்தப்படும் என்று வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், வால்பாறையில் சமீபத்தில் மரம் விழுந்து பலியான சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுவதற்காக எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு வால்பாறையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அங்கு வந்த எஸ்டேட் தொழிலாளர்கள், “தங்களுக்கு ரூ.300-க்கு மேல் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எம்எல்ஏவிடம் முறையிட்டு வலியுறுத்தினர்.
இதனை ஏற்றுக் கொண்ட எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு, அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
இதுதொடர்பாக எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு, செய்தியாளர்களிடம் கூறியது:
“தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சக் கூலியாக ரூ.286 வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. தற்போது நடைபெற்றத் தோட்டத் தொழிலாளர்களுக்கான பேச்சுவார்த்தையில் தினக் கூலியாக ரூ.292 வழங்க முடிவு செய்திருப்பதாக நிர்வாகத்தினர் தரப்பில் கூறியிருப்பதாகத் தெரிகிறது.
வரும் ஜூன் 30-ஆம் தேதியுடன் சம்பளம் ஒப்பந்தம் முடிவடைய உள்ள நிலையில், ரூ.300-க்கு குறைவாக புதிய சம்பளம் ஒப்பந்தம் ஏற்பட்டால் எஸ்டேட் நிர்வாகத்தினர்களைக் கண்டித்து தோட்டத் தொழிலாளர்களோடு இணைந்து உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.