
நீலகிரி
அணைப் பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்போகத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ள்னர்.
தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது முல்லைப்பெரியாறு அணை. கேரள மாநிலம் தேக்கடி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும்.
அணை பலவீனம் அடைந்து விட்டதாக கூறி, அணையில் 142 அடிக்கு மேல் தண்ணீரை தேக்க கேரள அரசு மறுத்து வருகிறது. இந்த அணையின் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக நெல் பாசன வசதி பெற்று வருகிறது.
வருடந்தோறும் முதல்போக நெல் சாகுபடிக்காக இந்த அணையில் இருந்து ஜூன் மாதம் முதல் தேதியில் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த சில வருடங்களாக பருவமழை பொய்த்து வருவதால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது தாமதமாகி வருகிறது.
குறிப்பாக கடந்த ஆண்டு முதல்போக சாகுபடிக்கு ஜூன் மாதம் கடைசி வாரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒருபோகம் மட்டுமே நெல் நடவு செய்யப்பட்டது. மழை பெய்யாததால் இரண்டாம் போகம் நெல் சாகுபடி பணிகள் நடைபெறவில்லை.
தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் 561 கனஅடியாக காணப்பட்ட நீர்வரத்து தற்போது 742 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோன்று 109 அடியாக காணப்பட்ட அணையின் நீர்மட்டம் 109.30 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் 802 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
கடந்த 25–ஆம் தேதி தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நீர்மட்டம் உயர்ந்து வருவதால் நேற்று முதல் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று முன்தினம் அணைப்பகுதியில் 30.3 மி.மீட்டரும், தேக்கடியில் 10.6 மி.மீட்டரும், கூடலூரில் 5 மி.மீ., சண்முகாநதி அணையில் 2 மி.மீ., உத்தமபாளையத்தில் 6 மி.மீ., மஞ்சளாறில் 2 மி.மீட்டரும் மழை அளவு பதிவாகி இருந்தது.
நேற்று அதிகாலை முதல் கூடலூர், கம்பம், லோயர்கேம்ப் மற்றும் குமுளி பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.