
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் திருவிழாவில் இருதரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில் வீட்டி அடித்து நொருக்கி, கார், மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேவுள்ள ஐயம்பாளையம் 6–வது வார்டை சேர்ந்தவர் ராம்பிரபு (54). அதே பகுதியை சேர்ந்த ஊர் நாட்டாண்மை சுந்தர் (52).
இவர்களுக்கிடையே கோவில் திருவிழாவில் வரி வசூல் செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்ததால் சமீபத்தில் ஊர் கூட்டமும் நடைப்பெற்றது. அதில், ஊரில் நடக்கும் திருவிழா உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் நாட்டாண்மை சுந்தர் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு நடப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் பட்டிவீரன்பட்டியில் உள்ள விளக்கு பகவதியம்மன் கோவிலில் நேற்று விளக்கு பூஜை நடந்தது. இதில், பங்கேற்க ராம்பிரபுவின் மனைவி தேவி கோவிலுக்கு வந்தார். அப்போது, அவரை, சுந்தர் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த குட்டி (என்ற) முனியசாமி, பிரகாஷ் ஆகியோர் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இது தொடர்பாக, தேவி தனது உறவினர்களிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தேவியின் உறவினர்கள் சுந்தர் வீட்டுக்கு சென்று இதுகுறித்து கேட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பட்டிவீரன்பட்டி காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்த பின்னர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சுந்தர் தரப்பை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள், ராம்பிரபு மற்றும் அவருடைய உறவினர்களான ராஜாத்தி, சாந்தி ஆகியோரின் வீடுகளுக்குள் புகுந்து, அங்கிருந்த டி.வி. உள்ளிட்டப் பொருட்களை அடித்து நொறுக்கினர்.
மேலும், ராம்பிரபுவின் வீட்டில் நின்றிருந்த ஜீப், மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து கொளுத்தியதில் அந்த வாகனங்கள் தீயில் கருகி நாசமாயின.
இதுபற்றி தகவலறிந்த நிலக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆய்வாளர்கள் கருணாகரன் (பட்டிவீரன்பட்டி), கருப்புசாமி (நிலக்கோட்டை) ஆகியோர் தலைமையிலான காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் அவர்கள் மோதலை கட்டுப்படுத்தினர்.
இது தொடர்பாக ராம்பிரபுவின் மனைவி தேவி, சுந்தரின் தாயார் ராஜசுப்புலட்சுமி ஆகியோர் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் காவலாளர்காள் வழக்குப்பதிந்து ராம்பிரபு, சாந்தி, பால்ராஜ் மற்றும் சுந்தர், அவரது தரப்பை சேர்ந்த சிவனாண்டி, நாகஜோதி, நாகம்மாள் உள்பட 20 பேரை கைது செய்தனர்.