
திண்டுக்கல்
வறட்சி நிவாரணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 120 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
“40 சதவீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படாத வறட்சி நிவாரணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும்.
நெல் தவிர பிற பயிர்களுக்கு இன்னும் வழங்கப்படாத பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக கொடுக்க வேண்டும்.
மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, விரைவாக இணைப்பு வழங்க வேண்டும்” உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர்.
அதன்படி, நேற்று திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு இந்தப் போராட்டம் நடைப்பெற்றது.
இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் தலைமைத் தாங்கினார். போராட்டத்திற்கு திரண்ட விவசாயிகள், உதவி ஆட்சியர் அலுவலக சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதனையொட்டி, அங்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல் வடக்கு காவல் ஆய்வாளர் தெய்வம் தலைமையிலான காவலாளர்கள் 30 பெண்கள் உள்பட 120 பேரை கைது செய்தனர்.