
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்த மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உத்தரவிட கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தஞ்சையில் உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஹாஜிஷேக் தலைமையில் தஞ்சை மாநகர தலைவர் முகமதுஇக்பால், பொருளாளர் சர்புதீன், மதுக்கூர் நகர தலைவர் சாகுல்அமீது ஆகியோர் முன்னிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தஞ்சை இரயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.
தலைமை தபால் நிலையம் அருகே வந்த அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தஞ்சை கிழக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு தலைமையிலான காவலாளர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.