இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு..? கடுப்பான ஆசிரியர்கள்.. பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் சலசலப்பு !!

By Raghupati RFirst Published Jan 24, 2022, 7:48 AM IST
Highlights

அரசு பள்ளி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, நடப்பு கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடவடிக்கைகள், 2021 டிசம்பர் 31ல் துவங்கின. ஜனவரி 12 வரை 'ஆன்லைன்' வழியில் விண்ணப்ப பதிவு நடந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 58 ஆயிரம் பேர் இடம் பிடித்துள்ளனர். பணி மூப்பில் ஆட்சேபனை உள்ளவர்களிடம் நேற்று மனுக்கள் பெறப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் அளிக்கப்படும். 

படிப்படியாக ஒவ்வொரு பிரிவினருக்கும் இடமாறுதல் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், பணிமூப்பு பட்டியலை பார்த்த ஆசிரியர்களில் சிலர், தங்களுடைய பணிமூப்பு வரிசை சரியாக இடம் பெறவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். குறைந்த ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி புரிந்தவர்கள் பலர், பணி மூப்பில் முன்னிலையில் உள்ளதாக கூறியுள்ளனர். இதை சரிசெய்ய மனு அளித்துள்ளதாக ஆசிரியர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதற்கிடையில், ஓராண்டுக்கு குறைவாக ஒரே இடத்தில் பணியாற்றிய ஆசிரியர்களின் மனுக்களை, பள்ளி கல்வி துறை நிராகரித்துள்ளது. இந்த செய்தி பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று முதல் இடமாறுதல் துவங்க உள்ளது. இதற்கிடையில், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் அதன் முந்தைய மாவட்டங்களுக்கு மட்டும், இடமாறுதலில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி கமிஷனரகம்நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஒருங்கிணைந்த மாவட்டங்களில் இருந்து பிரிந்து, புதிய மாவட்டங்களில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பிற ஆசிரியர்கள், அவர்களின் ஒருங்கிணைந்த மாவட்டம் அல்லது பிற மாவட்டத்திற்கு இடமாறுதல் பெறும் வகையில் சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது.

எனவே, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு. திருநெல்வேலி, தென்காசி, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, அவர்களது ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்படும்.

ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள காலியிடங்கள் கவுன்சிலிங்கில் வெளியாகும்.ஒவ்வொரு பதவிக்கும், புதிய மாவட்டங்களாக பிரிந்த ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கு மட்டும்,பிற்பகலில் மாறுதல் கவுன்சிலிங் நடக்கும். மற்ற மாவட்டங்களுக்கு காலையில் கவுன்சிலிங் நடக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.இந்த இடமாறுதல் கலந்தாய்வு முறையாக நடைபெறுமா ? என்று அரசு ஆசிரியர்களிடம் கேள்வி எழுந்து இருக்கிறது.

click me!