அரசியல்வாதிகளிடம் பணம் பறிக்கும் வகையில் பெண் ஒருவர் ஆபாசமாக போனில் பேசி வந்ததாக 2 நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது. இந்நிலையில், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சம்பந்தப்பட்ட பெண்ணே புகார் ஒன்றை தந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம், இடங்கணசாலையை சேர்ந்தவர் செல்வம். இவர் மேற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளராக இருக்கிறார். இடங்கணசாலை நகராட்சி தலைவர் பதவிக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற முயற்சித்து வருகிறார் இவர். இவரைப்போலவே, கட்சி நிர்வாகிகள் சிலர் முயற்சிப்பதால் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், செல்வத்தின் தம்பி சீனிவாசன் கடந்த ஜனவரி 21ல் மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
அதில், 'காடையாம்பட்டியை சேர்ந்த ரூபன் என்பவர், என் மொபைல் போனையும், 650 ரூபாயையும் பறித்துக்கொண்டு, தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்' என தெரிவித்திருந்தார். இதையடுத்து ரூபனை, போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, சேலம், சூரமங்கலத்தை சேர்ந்த கலைச்செல்வி மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பான புகார் ஒன்றினை அளித்திருக்கிறார்.
அவர் கொடுத்த மனுவில், ‘நான் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். சில நாளுக்கு முன், காடையாம்பட்டி ரூபன், ரமேஷ் ஆகியோர் என்னை காரில் கடத்திச்சென்றனர். அப்போது திமுக நிர்வாகிகளிடம் ஆபாசமாக பேச வைத்து, வீடியோ எடுக்கச்செய்தது செல்வம் தான். என்னை கத்தி முனையில் மிரட்டி கூறச்செய்து, அதன் ஆடியோ, வீடியோ சிலவற்றை பரப்பியுள்ளனர்.
அதனால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கலைச்செல்வி பேசும் சில வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் நாகேந்திரனிடம் பேசி, 'ரெக்கார்டிங்' மட்டும் எடுத்துத்தந்தால் வேலை வாங்கி தருவதாக கூறினர். அந்த ஆதாரங்களை, முதல்வரிடம் கொடுப்பதாக தெரிவித்தனர். பின், ரெக்கார்டிங் போதாது. அவரிடம் தவறாக நடக்கச்சொன்னார்கள். அது முடியாது என தெரிவித்து விட்டேன்.
இதையடுத்து, என் வீட்டில் கேமரா பிட் பண்ண செல்வம் சொன்னார். இது ஒன்று மட்டும் செய். அப்புறம் வீடு மாற்றிக்கொள்ளலாம். ரவியிடம் முழு பணம் உள்ளது. இந்த வேலைய முடித்துக்கொடுத்ததும், உனக்கு வீடு கட்டுற வேலைய ஆரம்பித்திடலாம் என்றனர். சிலர் கேமராவை என் வீட்டில் பொருத்தினர். இதையடுத்து, நாகேந்திரன் என் வீட்டில் இருந்தது பதிவானது. மேலும், என்னை தனிப்படை அமைத்து தேடுகின்றனராம். அந்த அளவு நான் ஏதும் தவறு செய்யவில்லை. செய்ய சொன்னது செல்வம் தான். நான் பணம் எதுவும் வாங்கவில்லை. பணம் வாங்கியது செல்வம் தான்’ என்று அதில் பேசியுள்ளனர்.
போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். பெண் மூலம் யார், யாரிடம் பணம் பறிக்கப்பட்டது என, பட்டியல் தயாரித்து விசாரிக்கின்றனர். இதுதொடர்பாக, கலைச்செல்வியிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் கூறுகையில், ‘நான் யாரிடமும் நெருக்கமாக இல்லை; என் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது. யாரோ பரப்பிய வதந்தியால், என் உயிருக்கு ஆபத்துள்ளது' என தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய திமுக தொண்டரணி அமைப்பாளர் செல்வம், ‘கலைச்செல்வியை மிரட்டி எனக்கு எதிராக வாக்குமூலம் பெற்று, என் பெயரை கெடுக்க முயற்சி நடக்கிறது. கூலிப்படையை சேர்ந்த சிலர், அரசியலில் என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் செய்த வேலை இது. கலைச்செல்வியே என்னை மிரட்டி வாக்குமூலம் வாங்கினார்கள் என, போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆதாரமின்றி, என் பெயரை பயன்படுத்தி, வீடியோ பரப்பி செய்தி வெளியிடுவோர் மீது வழக்குப்போட உள்ளேன்’ என்று கூறினார்.
கலைச்செல்வி இதுமட்டுமின்றி சேலத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களிடம் நெருக்கமாக இருந்ததாகவும், அவர்களுடன் நெருங்கி பழகி, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் வட்டாரங்களில் விசாரித்த போது, ‘இடங்கணசாலை நகராட்சி தலைவர் பதவிக்கு, தி.மு.க., சார்பில் போட்டியிட முயன்றவர்கள் இடையே போட்டி ஏற்பட்டதே இப்பிரச்னைக்கு காரணம்.
செல்வம் பணம் பறித்தார் என, யாரும் புகார் அளிக்கவில்லை. புகார் அளித்தால் விசாரிக்கப்படும். ஏற்கனவே செல்வத்தின் தம்பியை மிரட்டியதாக, ரூபன் கைது செய்யப்பட்டுள்ளார். ரூபன் மீது கொலை உள்பட, ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு, மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனின், ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். தொடர்ந்து கலைச்செல்வியின் புகார் மீது விசாரணை நடக்கிறது’ என்று கூறினர்.