
வடகாடு இருதரப்பு மோதல் விவகாரம் : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் கடந்த 5ம் தேதி இரவு இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் தமிழ்நாடு முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் வீடுகளுக்கு தீவைப்பு, 5 பேருக்கு அரிவாள் வெட்டு, பேருந்து கண்ணாடிகள் உடைப்பு, காவல்துறையினர் 4 பேர் காயம் மற்றும் காவல் ஆய்வாளருக்கு தலையில் வெட்டுக்காயம் என தகவல் பரவியது. இந்த சம்பவமானது குடிபோதையில் இருதரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல் என விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் கூறினர். வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பியும் விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல். திருமாவளவன் அளித்திருந்த பேட்டியில் வடகாடு முத்துமாரியம்மன் கோவில் தேரின் வடம் தொடும் உரிமையை குறிப்பிட்ட சமூக மக்கள் பெற்று இருப்பதாகவும் அங்கு வந்த அம்மக்களை சாதியின் பெயரைச் சொல்லிக் கூறி உரிமையை மறுத்ததாகவும் கூறி இருந்தார்.
இது தொடர்பாக வடகாடு கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமுதாய மக்கள் குறிப்பாக வடகாடு முத்து மாரியம்மன் கோவில் தேரின் வடம் தொடும் உரிமை தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தங்கள் உரிமை குறித்து அவதூறான கருத்தை தெரிவித்து இருப்பதாகவும், உண்மைக்கு புறமான தகவல்களை சமூக வலைதளத்தில் கூறி வருவதாகவும் தொல் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வடகாடு காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வடகாடு மோதல் விவகாரத்தில் இதுவரை ஒரு தரப்பில் 21 நபர்களும் மற்றொரு தரப்பில் 7 நபர்களும் என மொத்தம் 28 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சேதுபதி மீது கொலை முயற்சி வழக்கும் மற்றும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த வீரபாண்டி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பதிவு செய்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வடகாடு மோதல் விவகாரத்தில் வடகாடு காவல் ஆய்வாளர் தனபாலன் காவல்துறையின் மத்திய மண்டல காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது வடகாடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் பணியை இலுப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வனிதா கூடுதலாக கவனிப்பார் என்று புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா அறிவித்துள்ளார்.