
ரெய்டின்போது அராஜகம் செய்ததாக வருமான வரித்துறையினர் புகார்….வசமான சிக்கிக்கொண்ட அமைச்சர்கள்…
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது பெண் அதிகாரியை மிரட்டியதாக அமைச்சர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அதே நேரத்தில் நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கீதா லட்சுமி உள்ளிட்டோர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது.
இந்த ரெய்டின்போது அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் 89 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ஆவணங்களில் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் 6 அமைச்சர்கள் மூலம் பணம் விநியோகம் நடைபெற்றது தெரிய வந்துள்ளது.
இந்த ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையின் போது பெண் அதிகாரியை மிரட்டியதாக , அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் , மற்றும் தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது வருமானவரி துறையினர் சென்னை போலீசில் கமிஷனர் கரண் சின்ஹாவிடம் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக வருமான வரித்துறை ஆணையர் கரண் சின்ஹாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் , வருமான வரித்துறை சோதனையின்போது பெண் அதிகாரியை அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் மிரட்டியாதாகவும், பணி செய்ய விடாமல் தடுத்தாகவும் புகார் அளித்துள்ளார்.
அவர்கள் மீது ஆதாரங்களை அழித்தல்.மிரட்டுதல் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வருமான வரித்துறையினர் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவது அவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.