
மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் டாஸ்மாக் மற்றும் மதுபார்களை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி முதல் மதுபான கடைகள் மூடப்பட்டன. இதன் மூலம் கிடைக்கும் வருவாயும் அரசுக்கு கிடைக்காமல் போனது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு, அதற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் மதுக்கடைகளை ஆரம்பிக்க வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொது மக்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்நிலையில், நேற்று திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கக்கடைக்கு எதிராக, பெண்கள் குழந்தைகள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அதிரடி படை போலீசார் , அங்கிருந்த பொது மக்களை கண் மூடித்தனமாக தாக்கினார்.அதில் குறிப்பாக ஏடிஎஸ்பி பாண்டியராஜன், ஈஸ்வரி என்ற பெண்ணை கொடூரமாக தாக்கியதில், தற்போது அந்த பெண்ணின் ஒரு பக்க காது கூட கேட்கவில்லை .
இதனை தொடர்ந்து ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட ஏடிஎஸ்பி பாண்டியராஜன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமன்றி இந்த சம்பவம் தொடர்பாக தமிழக டிஜிபி, தலைமை செயலாளர் ஆகியோரிடமும் விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் ட்ராபிக் ராமாசாமி, வழக்கறிஞர் பாலு, சூரிய குமார் ஆகியோர் ஏ டி எஸ் பி பாண்டியராஜன் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது .
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, நீதிபதிகள் இந்திரா பேனர்ஜி, சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தடியடியின் போது காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சையை அரசே ஏற்கும் என்று தெரிவித்ததுடன், ஈஸ்வரி என்ற பெண்ணை ஏடிஎஸ்பி பாண்டியராஜன் கன்னத்தில் அறைந்ததற்கு துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இன்று இரவுக்குள் ஏடிஎஸ்பி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து காவல் துறை இயக்குனர் அறிக்கை வெளியிடுவார் என்றும் அமர்வு முன் தெரிவித்தார்.