
நிலக்கரி வந்ததையடுத்து தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மேலும் 2 அலகுகளில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. முன்னதாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நேற்று முதல் அலகில் மட்டும் மின் உற்பத்தி நடைபெற்றது.தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகளிலிருந்து, நாள்தோறும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு போதிய நிலக்கரி வரவில்லை. இதனால் சமீபத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இங்கு மின் உற்பத்தி அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த 21 ஆம் தேதி நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மொத்தமுள்ள 5 யூனிட்களில் 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டன. மேலும் 2 யூனிட் மட்டும் செயல்பட்டது. இதனால் தினமும் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. தமிழகத்திற்கு தேவையான நிலக்கரி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியது.
போதிய நிலக்கரி இல்லாததால் நேற்று முதல் முதல் அலகில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்றது. இதனால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று 29,000 டன் நிலக்கரி வந்ததையடுத்து, மேலும் 2 அலகில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. தற்போது 1,2,3 ஆகிய மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே 41 இடங்களில் மட்டும் மின் தடை ஏற்பட்டுள்ளது. கடந்தகால அதிமுக ஆட்சியின் போது இதே போன்ற மின்வெட்டு 68 முறை நடைபெற்றது.
இதுக்குறித்து அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய அரசு தினசரி வழங்கவேண்டிய நிலக்கரியையும் போதிய அளவு வழங்கவில்லை. தமிழகத்தில் இதனால் 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.