
டாஸ்மாக் கடைகளுக்கு விரைவில் டெபிட் கார்டு, டெபிட் கார்டு சிஸ்டம் வர உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு சார்பில் பல்வேறு உணவு கடைகள், காய்க்கறி கடைகள், தண்ணீர் பாட்டில் உள்பட பல்வேறு விற்பனை மையங்கள் உள்ளன. ஆனால், அனைத்திலும் மக்களுக்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு கூட்டம் அதிகளவில் செல்லாவிட்டாலும், அரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டுவது ‘டாஸ்மாக்‘ கடை மட்டுமே.
தீபாவளி, ஆயுதப்பூஜை, பொங்கல், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு உள்பட பல்வேறு விழா நாட்களில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு விற்பனைக்கான இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த இலக்கை சர்வ சாதாரணமாக முடித்துவிடுகின்றனர்.
அதேபோல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வார நாட்களை விட இரண்டரை மடங்கு வருமானத்தை காட்டுகிறது. பண்டிகை நாட்களில் 3 முதல் 4 நாட்களுக்கான வருமானத்தை ஈட்டுகின்றனர்.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி மத்திய அரசு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதையடுத்து பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அதிலும் குடிமகன்கள் பணம் இல்லாமல், கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு டாஸ்மாக் “குடிமகன்களுக்கு சலுகையாக “டெபிட் கார்டு” பயன்படுத்த அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.
இதையொட்டி டாஸ்மாக் கடைகளில் டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்யும் மெஷின்களை வாங்க திட்டமிட்டுள்ளனர். இந்த மெஷின்களில் ரூ.200க்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும், சரக்குகளை வாங்கலாம். அதற்கான பணத்தை, அவர்களது வங்கி கணக்கில் இருந்து எடுத்து கொள்ளப்படும் என தெரிகிறது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது, டாஸ்மாக் கடைகளில் கடந்த 15 நாட்களாக வருமானம் குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் பணத்தட்டுபாடு. அதிகளவில் உள்ளது. பலர் செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கொண்டு வருகிறார்கள்.
இந்த பணத்தை பல அரசு அலுவலகங்கள் வாங்கினாலும், நாங்கள் வாங்க முடியாது. பணம் புழக்கத்தில் இருக்கும்போதே கள்ள நோட்டுகள் சர்வசாதாரணமாக எங்களிடம் வரும். இப்போது தடை செய்யப்பட்ட பின், பதுக்கி வைத்துள்ள கள்ள நோட்டுகள் அதிகளவில் வரத் தொடங்கியது. அதனால், 500, 1000 ரூபாய் நோட்டுகளை நாங்கள் வாங்குவதில்லை.
குடிமகன்கள் பணத்தை வைத்து கொண்டு தவிப்பதால், அவர்களுக்கு சுலபமாக சரக்கு கிடைக்க டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் மூலம் சரக்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். விரைவில் அதற்கான மெஷின் வாங்கப்படும். அதில் ரூ.200க்கு மேல் எவ்வளவுக்கு வேண்டுமானாலும், சரக்கு பாட்டில்களை வாங்கி கொள்ளலாம்.
ரூ.100க்கு சரக்கு பாட்டில்களை வாங்கினால், அந்த பணம் எங்களதுகணக்கில் சேர குறைந்தது 20 முதல் ஒரு மாதம் ஆகும். அதே 200க்கு மேல் வாங்கினால், உடனே எங்கள் கணக்கில் சேர்ந்துவிடும் என்றார்.