
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார். இவருடைய மனைவி மலர். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளன. இதில் மூத்த பெண்ணான வினிஷ்கா (19) என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் மாதேஷ் (19) என்பவரும் தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் போது இருந்தே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வினிஷ்கா தற்போது பர்கூர் பகுதியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் பெற்றோர்கள் வினிஷ்காவுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்த நிலையில் காதலை கைவிட்டுள்ளார். இதனால் விரக்தி அடைந்த மாதேஷ் அவ்வப்போது வினிஸ்காவின் வீட்டருகே வந்து லவ் டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த பெண் கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்த எலி பேஸ்டை சாப்பிட்டு மயங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தார்.
அதனைத் தொடர்ந்து வினிஷ்கா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு காரணமாக உறவினர்கள் மாதேஷ் மீது நடவடிக்கை எடுக்க ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் வாணியம்பாடி வழியாக திருப்பத்தூர் செல்லும் சாலையில் ஜோலார்பேட்டை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் காரணமாக அங்கிருந்து கலைந்து சென்றனர்.