
பெரம்பலூர்
தேசிய தடகள போட்டிகளில் வென்று சாதனை படைத்த பெரம்பலூரைச் சேர்ந்த மாணவிகளுக்கு ஆட்சியர், அவரது அலுவலகத்தில் சந்தித்து பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் நடத்திய 63-வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகளை நடத்தியது. இந்தப் போட்டிகள் அரியானா மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெற்றன.
இந்தப் போட்டியில் பெரம்பலூர் விளையாட்டு விடுதி தடகள மாணவிகள் மூன்று பேர் தமிழ்நாடு அணி சார்பாக பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர்.
19 வயதிற்குட்பட்ட மும்முறை தாண்டுதல் போட்டியில் நாகபிரியா வெண்கல பதக்கமும், 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் பவானி ஆறாமிடமும், 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் கிருத்திகா ஆறாமிடமும் பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்தப் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற நாகபிரியாவிற்கு தமிழக அரசு சார்பாக ரூ.1 இலட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.
மேலும், மாநில அளவிலான ரிலையன்ஸ் பவுண்டேசன் இளையோர் தடகள போட்டிகள் சென்னை நேரு விளையாட்டரங்கில் ஜனவரி 8-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைப்பெற்றது.
பெரம்பலூர் விளையாட்டு விடுதி தடகள வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்றனர். மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிகள் மாவட்ட ஆட்சியர் சாந்தாவை ஆட்சியரகத்தில் சந்தித்து பாராட்டுகளைப் பெற்றனர்.
அப்போது, பேசிய மாவட்ட ஆட்சியர், "தேசிய அளவிலும், மாநில அளவிலுமான போட்டிகளில் வெற்றிப்பெற்று நமது நாட்டிற்கும், பெரம்பலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்,
மேலும், பல்வேறு சாதனைகளை படைக்க உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது" என்று பேசினார்.
இந்த சந்திப்பின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்பிரமணியராஜா, தடகள பயிற்றுனர் கோகிலா ஆகியோர் உடன் இருந்தனர்.