
நீலகிரி
முதுமலை காட்டில் கருஞ்சிறுத்தை நடமாட்டத்தை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். இதனைக் கண்ட வனத்துறையினர், புலி, யானைகள் போன்ற விலங்குகளை காண்பதே மிகவும் அரிது. கருஞ்சிறுத்தை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே 321 சதுர கி.மீட்டர் பரப்பளவில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது.
கூடலூர் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை, கக்கநல்லா - மசினகுடி வழியாக ஊட்டிக்கு புலிகள் காப்பகம் வழியாக சாலைகள் செல்கிறது.
இந்த நிலையில் கூடலூர், முதுமலை பகுதியில் பருவமழை காலம் முடிந்து கடும் பனிப்பொழிவு நிலவுவதால் காட்டில் உள்ள புற்கள் காய்ந்து வருகிறது. மேலும் பகலில் நன்கு வெயில் காணப்படுவதால் வறட்சியான காலநிலையே காணப்படுகிறது.
இதனால் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் காட்டு யானைகள் இடம் பெயர்ந்து வருகிறது.
இதேபோல வனப்பகுதியில் புதர்கள் காய்ந்து வருவதால் புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகளும் நீர்நிலைகள் மற்றும் புதர்கள் நிறைந்த பகுதிகளை தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக முதுமலை சாலையோரம் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வழக்கமாக காட்டு யானைகள், மான்கள் தான் அதிகளவு தென்படும். ஆனால், தற்போது புலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினரால் அறிவுறுத்தப்படுகின்றனர்.
வனப்பகுதியில் செல்லும்போது வாகனங்களை நிறுத்த கூடாது என்றும் வனத்துறையினர் வலியுறுத்தி வருகின்ற நிலையில் முதுமலை தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி செல்லும் சாலையோரம் புதர் மறைவில் இருந்து கருஞ்சிறுத்தை ஒன்று வெளியே வந்தது. அப்போது அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் அதை கண்டு ரசித்தனர்.
அப்போது வனத்துறை ஊழியர்கள் சிலரும் அங்கு வந்தனர். அவர்களும் தங்களது செல்போனில் கருஞ்சிறுத்தையை படம் பிடித்தனர். மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதை கண்ட கருஞ்சிறுத்தை உடனடியாக சென்று புதருக்குள் பதுங்கி கொண்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப் பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர், "முதுமலை வனப்பகுதியில் சாலையோரம் சிறுத்தைப் புலி, யானைகள் போன்ற விலங்குகளை காண்பது மிகவும் அரிது. அதில் கருஞ்சிறுத்தைகளை காணவே முடியாது. தற்போது கருஞ்சிறுத்தை தென்பட்டுள்ளது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
எனவே, சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும், வனப்பகுதிக்குள் எங்கேயும் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்றும் தெரிவித்து வருகிறோம்" என்று தெரிவித்தனர்.